Friday, December 17, 2010

ஒரு வானம் வைத்திருக்கிறேன் - கவின்

1.
கொட்டும்
மழையில்
படுத்துக்கிடந்தேன்
ஒரு
நாயைப் போலவும்
கரையும்
ஒரு
காகிதப் படகெனவும்
ஒரு
உறிஞ்சப்படும்
குவளையின்
மிதந்தலையும்
தேநீராகவும்.

2.
புதைமணலுக்குள்
போய்க்கொண்டிருக்கிறது
என் பெயர்
கடைசி எழுத்து
மூழ்கிடும் முன்
ஒரே ஒரு முறையும்
உச்சரித்து விடாதீர்கள்.

3.
என்னை என்னால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை.

4.
தீயைச் சுவைக்க
அலைகிறது மனம்
ஏதோ
முன்பின்
சுவைத்திருப்பது போல.

5.
ஒரு
சொல்லை
பி
டி
த்


டி
பறக்க முடிகிறது.

6.
கிடைத்த எல்லாவற்றையும்
உடைத்தெறிந்தேன்
பிறகொருனாள்
என்னயே நான்
உடைத்துக்கொண்டேன்.

7.
தூரிகையை
கன்னத்தில்
வைத்துப் பார்த்தேன்
அந்தக் குளிர்ச்சி
எந்த வர்ணம்?

8.

ம்
பு
க்
கு
றி
யாய்
கூரை வீடு
நிலவைப் பார்க்கச் சொல்லும்.

9.
கடித்த கொசுவை
அடிக்கத் தூக்கிய
கையிலும் கடித்தன
சில கொசுக்கள்.

10.
கல்லறை மேல்
அமரும் பறவைகள்
கனவுகளையெடுத்து
பறந்து போகின்றன
ஆகாயத்திற்கு அப்பால்.

11.
ஒரு வானம் வைத்திருக்கிறேன்
ஒரு கோடி சிறகுகளும் வைத்திருக்கிறேன்

12.
ஒரு கெட்ட வார்த்தையை
ஆச்சர்ய வார்த்தையாக
மாற்றிப் பயன்படுத்தும் திறன்
எம் தமிழருக்குக் கைவந்திருக்கிறது
வாழிய நீ பராசக்தி.

13.
வெறுமையின் மாலை.
தனிமையில் இழைந்திருக்கும்
ஒலிக்கப்படாத இசைத்தகடு.
ஒரு தேநீர்.
சில அச்சுத் தாள்கள்.
அனிச்சையான உச்சரிப்புகள்.
பிடிவாததத்தில்
ஆழ்ந்து கூவும் குயில்.
எல்லாம் கடந்த பின் கவனித்தேன்
தவறிய அழைப்பில் யாரோ.

14.
என்மீது ரயிலொன்று
ஏறிப்போனால்
என்னவாகுமென்று
யோசித்துப் பார்த்தேன்
நன்றாக இருந்தது.

15.
எங்கோ நீர்வழியும்
ஓசையின் உள்ளுணர்வில்
விழித்துக் கொண்டேன்
நியான் வெளிச்சத்தில்
ஒரு பெரிய மரம்
என்னைப் பார்த்துக் கொண்டு
நி
ற்
கி

து
ஜன்னளுக்கு வெளியே.

16.
நீண்ட நேரமாய்
மனதுக்கு ஏதோ
வேண்டும் போலிருக்கிறது
ஆனால் என்னவென்று தெரியவில்லை.

17.

முந்தய கணத்தை
யோசித்துப் பார்த்தேன்
யோசிக்க மட்டுமே முடிந்தது

18.
என் மீது யாரோ
பூக்களை வாரியிறைப்பதைப் போல
மழை பொழிந்துகொண்டிருந்தது.

19.
உருவமற்ற மனதின்மேல்
நடனமாடும் சொற்கள்
வலியென்னவோ நிஜம்தான்

20.
நிலாப் பார்ப்பதை ஆச்சர்யமாய்ப் பார்க்கிறார்கள்.

21.
கூரிய சிறகுகளுடைய சொற்கள்
வெகுநேரமாய்
பின்தொடர்கின்றன.
ஒரு கணத்தில்
சட்டென்று நின்று திரும்பி
ஒற்றைப் பார்வையில்
அத்தனை சொற்களையும்
மண்ணுக்குள்ளோ
மலைக்குள்ளோ
புதைத்துவிடலாமென்று பார்க்கிறேன்.

22.
படபடக்கும் காகிதங்கள்
எழுதச் சொல்லும் கவிதை
எதுவென்று தெரியாமல்
பேனாவை மூடி
அவற்றின்மேல் வைக்கிறேன்
இப்போதைக்கு.

23.
மயில்போல
அபிநயம்
செய்துகாட்டிய
ராஜேஸ்வரிக்கு
தெரியப்படுத்த வேண்டும் போலிருக்கிறது
அவள் போன பிறகு
நிஜமாகவே
மழை வந்தது பற்றி.

24.
அந்த போலீஸ்காரர்
கையிலிருந்த கம்பு
ஒரு புல்லாங்குழல்
போலிருந்தது.

25.
காதலிகளின் அருகாமையில்
திறக்கப்படும்
ஆண்களின் பர்ஸ்களுக்கென்று
ஒரு லாவகம் இருக்கிறது.

26.
வாட்டர் ஃபில்டரிலிருந்து கசிந்த
ஒரு சொட்டு
தண்ணீரின் கணம்
நெஞ்சுக்குள் விழுந்து
கொண்டுவந்து கொடுத்தது
நாய்கள் எதுவும் குரைக்காத
ஒரு நிசியை.

27.
கனவில் வந்த
நிறமற்ற ரயில்
சத்தம் போடாமலேயே
என் மீது
ஏறிப்போனது.
பின்னொரு
கனவில் வந்த
வானத்தில்
நிறைய நிலாக்கள் .

28.

காற்றில் தன்
தும்பிக்கையை
தேடிக்கொண்டிருக்கிறது
சிதிலமடைந்த யானைச் சிற்பம் .

29.
மழையோடு வந்த
குளிர்காற்றை வரவேற்று
அமரவைத்து
தேநீர் கொடுத்தேன்.

30.
இலை நுனியின்
வெறுமையைச் சுவைத்தபோது
ஒரு
பெருநகரம் காத்திருந்தது.

31.
ரயிலில் பயணிக்கையில்
அழைபேசியில் அழைத்து
அப்போதுதான் எழுதியிருந்த
கவிதையினைப் படித்துக்காட்டினான்
நண்பன் .
தலைப்பு
'கண்ணாடி ஆப்பிள்'.
எழுதியவன் குரலிலேயே
அலாதியாய்ச் சுவைத்தது அவ்வாப்பிள்.
கவிதை முடிந்து
நன்றி சொல்லி
அழைப்பு நிறவுற்ற கணத்தில்
மேலடுக்கில் பத்திரப்படுத்தியிருந்த
பைக்குள்ளிருந்து
அம்மா கொடுத்தனுப்பிய
ஒற்றை ஆப்பிள்
எண்ணங்களில் உருளத்துவங்கிற்று.
தொடவோ
தின்னவோ முடியாமல்
கனவுகள் பளபளத்தபடி.

32.
ஒரு சேரக்கூவிக் களிக்கும்
குயில்கள் அறியுமா
அலைக்கழியும்
என்
சொற்கள் பற்றி?.

33.
விதவிதமாய் வெளிப்படும்
அம்மாவின் திட்டுக்களைப் போலிருந்தது
நகரப் பேருந்தின்
ஹாரன் சப்தம்.
அடுத்த வாரம்
ஊருக்குப் போகவேண்டும்.

34.
இசைப்பிரவாகத்திற்கு
முந்தைய
இசைக்கலைஞனின்
வாத்தியப் பயிற்சிக் குறிப்புகளாய்
துவங்கிற்று
பெருமழைக்கு முந்தைய
சிறுதூறல்.

35.
ஒரு உண்மயைச் சொல்கிறேன்
நம்புவது உங்கள் விருப்பம்
பாதிக்கு மேல்
உண்மையில்லையென்றால்
வட்டம் சதுரமாகிவிடும்.

36.
தெரிந்த
எல்லாக் கதைகளையும்
மறந்துவிட்டு
சொல்லத்துவங்குங்கள்
குழந்தைகளுக்கு
இனியும் ஒரு கதையை.

37.
தினம் ஒரு
பெரியார் வாசகம் எழுதும்
ஆட்டோஸ்டேண்ட் கம்பலகைக்கு
அருகாமைத் தார்ச்சாலையில்
வரையப்பட்டிருந்த
அனுமார் படத்தில்
பக்தியும் பயமும்
சில்லறைகளாய்
சிதறிக்கிடக்கும் .
பெரியாரையும் வியப்போம்
அனுமாருக்கும் பயப்போம்
ஜெய்ஹனுமான் வெங்காயம்.

38.
சுயமற்ற வேளையில்
ஒரு ஆகாயம் திறந்திற்று
என் தலைக்குள்.

39.
வெறித்துப் பார்த்து
திகிலூட்டும் பூனைகளுக்கு
குலைத்துச் சலிக்கும்
நடுநிசிநாய்கள்
எவ்வளவோ பரவாயில்லை.

40.
தனிமையின் சரல்கற்கள்
என் நதியெங்கும்
விரவிக்கிடக்கின்றன
உருட்டிப்பார்த்து
கன்னத்தில் வைத்துக்கொள்ள
ஒரு பிஞ்சுக்கையேனும்
வராமலா போகும்?